வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்
பேரூர்
பேரூர் அருகே பள்ளத்தை கடக்க முயன்ற பெண்ணை மழை வெள்ளம் அடித்து சென்றது. தீயணைப்புத்துறை படை வீரர்கள் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்
கோவை பேரூர் அருகே தென்கரை கிராமம், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் மருதன். இவரது, மனைவி விஜயா (வயது 55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த கினியம்மா, ராமத்தாய் உள்ளிட்ட 3 பேருடன் அருகேயுள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலைக்காக சென்றுள்ளார்.
வழக்கம்போல் மதியம் 1.30 மணிக்கு மேல், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால் அவசரமாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
தோட்டம் அருகே உள்ள பள்ளத்தில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் செல்வதை நம்பி, விஜயா முதலாவதாக பள்ளத்தில் இறங்கி கடக்க முயன்றுள்ளார். அப்போது பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அதிகமான மழை நீர் பெருக்கெடுத்து வந்துள்ளது.
இதில், சிக்கிய விஜயா கண்ணிமைக்கும் நேரத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தேடும் பணி தீவிரம்
தங்கள் கண்முன்னே விஜயா மழை நீரில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு, உடன்வந்த சக பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக செல்லாமல் மாற்று வழியாக சென்றனர்.
இந்த சம்பவம் விஜயாவின் கணவர் மருதனிடம் தெரிவித்தனர். உடனே மருதன், பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, பேரூர் போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மழைநீர் அடித்துச் சென்ற பள்ளம், வழியோர நீர்நிலைபகுதி, தடுப்பணை ஆகிய பகுதிகளுக்குச் சென்று விஜயாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூலி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பெண், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.