முதியவரின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சி

முதியவரின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சி

Update: 2021-10-16 17:43 GMT
கோவை

கோவையில் சாலையோரம் படுத்திருந்த முதியவரின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்ற தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சாலையோரம் படுத்த முதியவர் 

கோவை மாநகரில் சாலையோரங்களில் ஆதரவற்ற பலர் இரவு நேரத்தில் படுத்து வருகிறார்கள். அவர்கள் பகல் நேரத்தில் கிடைக்கும் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் கிடைக்கும் இடங்களில் தூங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் காட்டூர் ராம்நகர் அன்சாரி வீதியில் பழனியை சேர்ந்த ராஜன் (வயது 60) என்பவர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் குடிபோதையில் வந்த சிலர், ராஜனிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு உள்ளனர். 

தலையில் கல்லை போட்டனர் 

அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், ராஜனை தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவருடைய தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜன் அலறி துடித்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

4 பேருக்கு வலைவீச்சு 

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

அதில், சாலையோரம் படுத்திருந்த தந்தை-மகன் உள்பட 4 பேர், ராஜனின் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயன்றது தெரிய வந்தது. தற்போது தலைமறைவாகிவிட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்