குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையால் குழந்தையுடன், கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-16 17:29 GMT
குள்ளனம்பட்டி:

குடும்ப பிரச்சினை

திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டி வேளாங்கண்ணிபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் கஸ்பார் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும், திண்டுக்கல் தோமையார்புரத்தை சேர்ந்த அகினோ பிரின்சி (24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, திமோஸ் லிவி (3) என்ற ஆண் குழந்தை இருந்தது.  

கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த 14-ந்தேதி அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

இதனால் ஸ்டீபன் கஸ்பாரிடம் கோபித்து கொண்டு, அன்றையதினமே குழந்தையுடன், தோமையார்புரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அகினோ பிரின்சி வந்து விட்டார்.

கிணற்றில் பிணம்

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி அவர் குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டார். இதில் சந்தேகமடைந்த அவருடைய பெற்றோர், ஸ்டீபன் கஸ்பாருக்கு ேபான் செய்து கேட்டனர். 

அப்போது அகினோ பிரின்சி வீட்டுக்கு வரவில்லை என அவர் கூறினார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, பல்வேறு இடங்களில் அகினோ பிரின்சி மற்றும் குழந்தையை தேடினர். இருப்பினும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் நேற்று தோமையார்புரம் அருகே உள்ள சுமார் 60 அடி ஆழம் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தையுடன், பெண் ஒருவர் பிணமாக மிதந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

குழந்தையுடன் தற்கொலை
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

மேலும் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

  போலீசார் விசாரணை

 இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் அகினோ பிரின்சியும், அவருடைய குழந்தை திமோஸ் லிவி என்றும் தெரியவந்தது.
 
 சுடிதார் துப்பட்டாவால் குழந்தையை தனது இடுப்பில் வைத்து கட்டிக்கொண்டு, அகினோ பிரின்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையுடன், தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் செய்திகள்