பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
முருகபவனம்:
புரட்டாசி மாத சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும், பக்தர்கள் அவரவர் இல்லங்களில் புரட்டாசி விரதம் தொடங்குவதும் வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு புரட்டாசி மாதத்தின் முதல் வாரத்தில் விரதத்தை தொடங்கினர். இந்நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று, திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி மூலவர் சுவாமிக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் கோவில்
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் வீடுகளில் படையலிட்டு சாமி கும்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா, ருக்குமணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி துளசி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும் திருமஞ்சனம், தீபாராதனைகள் சாமிக்கு நடந்தது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், தேவியர்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி கோவில்கள்
பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவில், வேணுகோபால பெருமாள் கோவில், ராமநாதநகர் லட்சுமி-நரசிம்மர் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், கண்ணடிய பெருமாள் கோவில் என அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெருமாளுக்கு விளக்கு ஏற்றியும், துளசி மாலை அணிவித்தும் வழிபட்டனர். பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றது.
மேலும் பல்வேறு கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பழனி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்ததால், அதில் நனைந்தபடியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கதிர்நரசிங்க பெருமாள்
கோபால்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் பூக்களால் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல், கோபால்பட்டி, சிலுவத்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர்.
கோபால்பட்டி அருகே உள்ள ஜெ.மணியகாரன்பட்டியில் பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பஞ்சமுக சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.