கடலூரில் பரபரப்பு 2 அடி நீள பாம்பை விழுங்கிய கட்டுவிரியன் பாம்பு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

கடலூரில் 2 அடி நீளமுள்ள பாம்பை, கட்டுவிரியன் பாம்பு ஒன்று விழுங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Update: 2021-10-16 17:16 GMT
கடலூர், 

கடலூர் கோண்டூர் ராம்நகரில் உள்ள ஒருவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 2 பாம்புகள் சீறி சண்டை போட்டது. சத்தம் கேட்டதும் வீட்டு உரிமையாளர் எழுந்து பார்த்துள்ளார்.

 இதையடுத்து அவர் அந்த பாம்புகளை துரத்தி விட்டார். ஆனால் அந்த பாம்புகள் வீட்டு வாசல் அருகில் உள்ள மாடி படிக்கட்டுகளுக்குள் சென்று விட்டது.

பின்னர் இது பற்றி வீட்டின் உரிமையாளர், கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது கட்டுவிரியன் பாம்பு, நழுவ (சுவரொட்டி) பாம்பை விழுங்கிக்கொண்டிருந்தது. 

அதற்குள் அந்த பகுதியில் உள்ள தெருவாசிகள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் கட்டுவிரியன் பாம்பு, நழுவ பாம்பை விழுங்குவதை தங்களின் செல்போனில் பதிவு செய்தனர்.

சமூக வலைதளங்களில் வைரல்

தொடர்ந்து அந்த கட்டுவிரியன் பாம்பு, நழுவ பாம்பை முழுமையாக விழுங்கிய பிறகு, அந்த பாம்பை பிடித்த செல்லா அதை பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று விட்டார். இதற்கிடையில் கட்டுவிரியன் பாம்பு, நழுவ பாம்பை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பாம்புகள் இரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளது. 

குறிப்பாக கட்டுவிரியன் பாம்புகள் இரவில் தான் இரை தேடி வெளியே வரும். அந்த நேரத்தில் நழுவ பாம்பை விழுங்கி உள்ளது. நழுவ பாம்புக்கு விஷம் கிடையாது என்று பாம்புபிடி வீரர் செல்லா தெரிவித்தார். பிடிப்பட்ட கட்டுவிரியன் 4 அடி நீளம் உடையதாகவும், அது விழுங்கிய நழுவ பாம்பு 2 அடி நீளம் கொண்டதாகவும் இருந்தது.

பாம்புகளில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பாக கருதப்படுவது கட்டுவரியன் பாம்பு ஆகும். அத்தகையை பாம்பு அப்பகுதியில் பிடிப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்