காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பெண் சாவு தம்பதிக்கு தீவிர சிகிச்சை
காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தாா்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே ம.ஆதனூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனவைி மஞ்சுளா. பெரியநெல்லி கொல்லையில் உள்ள தனது தந்தை செந்தில்குமார் என்பவரது வீட்டுக்கு கணவருடன் சென்று இருந்தார்.
பின்னர் நேற்று காலை, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சுரேஷ், மஞ்சுளா மற்றும் மஞ்சுளாவின் தாய் பாப்பா (45) ஆகியோர் ம.ஆதனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வீராணம்ஏரிக்கரை சாலையில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வந்த போது, சாலையின் குறுக்கே பாம்பு ஒன்று சென்றது. இதனால் சுரேஷ் மோட்டார்சைக்கிளை மெதுவாக இயக்கினார்.
அந்த சமயத்தில் அவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பாப்பா அரசு பஸ்சின் பின்பக்க சக்கரத்திற்கு அடியில் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மஞ்சுளா, சுரேஷ் ஆகியோர் காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.