மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

தீபாவளி நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவால் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-10-16 17:10 GMT
புதுச்சேரி, அக்.17-
தீபாவளி நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவால் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4 மாத அவகாசம்
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேலும் 4 மாதம் அவகாசம் அளிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடத்தை விதிகள் தொடரும்
இத்தகைய சூழ்நிலையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் தற்போது அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை ரத்துசெய்ய வேண்டும் என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவுக்கு பதில் அளித்த மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோர்ட்டு உத்தரவின்றி எதையும் செய்ய முடியாது என்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடருவதாக அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வேதனை
இது அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் விதிமுறை காரணமாக தீபாவளி பண்டிகைக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே கொரோனா காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வழங்கும் நிவாரண பொருட்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும் என்று நினைத்த மக்கள் மனதில் தற்போது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு, கடந்த காலங்களில் வழங்கியதுபோல் இலவச வேட்டி சேலை வழங்க திட்டமிட்டிருந்த ஆட்சியாளர்களும் இந்த ஆண்டு அதை வழங்க முடியுமா? என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
வர்த்தகர்கள் 
தற்போது பண்டிகை காலம் என்பதால் பணப்புழக்கத்துக்கு தேர்தல் துறையின் மூலம் இடையூறு ஏற்படும் என்று வியாபாரிகளும் கருதுகின்றனர். வியாபாரத்தின் மூலம் வந்த பணமாக இருந்தாலும் அந்த பணத்தை பிடித்து வைத்துக்கொண்டு தேர்தல் துறை அதிகாரிகள் தங்களை தேவையின்றி அலையவிடுவார்கள் என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணையம் திரும்ப பெறவேண்டும் என்று வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்