நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

Update: 2021-10-16 16:55 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 30 மி.மீட்டரும், நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று இன்றும், நாளையும் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் 4 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்தும் வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், குடற்புழுக்களின் நோய் உண்டாக்கும் பருவம் மற்றும் நாடா புழுக்களை பரப்பும் புல் சிற்றுண்ணிகளும் மேய்ச்சல் காடுகளில் அதிகமாக காணப்படும். இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் இளம் குட்டிகள் மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு தாக்கம் ஏற்படலாம். குடற்புழு தாக்கல் கண்ட கன்றுகளில் தீவனம் திண்ணாமை, வளர்ச்சி குறைவு மற்றும் கழிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க கால்நடைகளுக்கு சாண பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
மூச்சுக்குழல் அயற்சி
கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழி பண்ணைகளில் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் மழைக்காலமாக இருப்பதால் கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் மழைநீர் ஒழுகாமல் சரி செய்ய வேண்டும். தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பானை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்