கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-10-16 16:33 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனிமேடு ஊராட்சியில் உள்ள 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுமதி, ரேவதி உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இவர்களில் சுமதியும், ரேவதியும் தலா 171 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மறுநாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும்படி அதிகாரிகள் கூறினர்.
ஆனால் குலுக்கல் நடத்தாமலேயே ரேவதி வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது. சுமதியின் கணவர் சந்தோஷ்குமார் மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள், நேற்று முன்தினம் மாலை மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து குலுக்கல் முறையில் வேட்பாளரை தேர்வு செய்யும்படி கோஷம் எழுப்பியவாறு தர்ணா போராட்டம் செய்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

இந்நிலையில் நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள பெருந்திட்ட வளாக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் முறைகேடு நடந்ததை கண்டித்தும், குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை தேர்வு செய்யக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
உடனே விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதையடுத்து விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் அங்கு நேரில் வந்து மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி குலுக்கல் நடத்தி வெற்றி வேட்பாளரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்