கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைவெள்ளம்

கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைவெள்ளம்

Update: 2021-10-16 16:31 GMT
திருப்பூர், 
திருப்பூரில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
கனமழை 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கனமழை பெய்து வந்து கொண்டிருக்கிறது. காலை, மாலை, இரவு என திடீரென மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே மாநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. 
இதற்கிடையே திடீரென மதியம் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியது. 
எச்சரிக்கை 
இதுபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள 2-வது ரெயில்வே பாலம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், யூனியன் மில் ரோடு பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாக்கடை கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலைகளில் ஓடின. திருப்பூர் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. 
இதன் காரணமாக ஏராளமான பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ஆபத்தான பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அவினாசி
அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக வெயில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து அவினாசி, ஆட்டையாம்பாளையம், வேலாயுதம்பாளையம், வெள்ளியம்பாளையம், அவினாசிலிங்கம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் தொடர்ந்து 5 மணி வரை பரவலாக மிதமான மழை பெய்தது. ரோட்டில் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. நீண்ட நேரம் பரவலாக மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்