நவராத்திரி திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 9 கோவில் சாமிகள் திருவீதி உலா திரளான பக்தர்கள் தரிசனம்

நவராத்திரி திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 9 கோவில் சாமிகள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-10-16 16:02 GMT
கிருஷ்ணகிரி:
நவராத்திரி திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 9 கோவில் சாமிகள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவராத்திரி திருவிழா 
கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவையொட்டி சைவ மற்றும் வைணவ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி அம்மன் கோவில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி வீதி உலா நடந்தது.
இதில், பழையபேட்டை மாரியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், திருநீலகண்டர் கோவில், பழையபேட்டை சீனிவாசர் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியசாமி கோவில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோவில் ஆகிய 9 கோவில்களில் இருந்து மின் விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வந்தன.
சாமி ஊர்வலம் 
இந்த ஊர்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோவில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் 9 சாமிகள் சப்பரங்களுடன் ஊர்வலமாக வந்தன. இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் உள்ள சாமிகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் அந்தந்த கோவில்களுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்