தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையினால் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை இன்னும் நீடித்து வரும் நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், வீடூர் அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.
தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து
தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை நிரம்பியதால் அந்த அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர், தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாலும் விழுப்புரம் எல்லீஸ்சத்திரத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இங்குள்ள அணைக்கட்டு நிரம்பியதால் அதன் 2 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் அங்கிருந்து ஆழாங்கால் வாய்க்கால் வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
மேலும் எல்லீஸ்சத்திரம் ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள், அங்குள்ள அணைக்கட்டுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
ஆற்றில் ஓடும் தண்ணீரில் சிறுவர்கள், இளைஞர்களும் மகிழ்ச்சியுடன் குளித்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.