அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2021-10-16 14:31 GMT
ஊட்டி

தொடர் விடுமுறையை ஒட்டி ஊட்டிக்கு வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

தொடர் விடுமுறை

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறையை கழிக்க மலைகளின் அரசியான ஊட்டியில் இதமான சூழலை அனுபவிக்க வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர். 

இதனால் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் நிரம்பி உள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

எனவே 2-வது சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் மலைப்பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 


குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சந்திப்பு, குன்னூர் சாலையோரங் களில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நிறுத்தப்படுகின்றன. 
சிலர் தங்களின் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடைகளுக்கு சென்று விடுகின்றனர். 

சாலை யோரத்தில் நீண்ட நேரமாக வாகனங்கள் நிற்பதால் அடுத்து வரும் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பது இல்லை. இது போன்ற நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

சுற்றிப்பார்க்க முடிய வில்லை

சுற்றுலா தலங்கள் அருகே உள்ள வாகன நிறுத்துமிடங்கள் வாகனங்க ளால் நிரம்பி வழிகின்றன. 

இதனால் அங்கும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சூட்டிங்மட்டம், பைக்காரா பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலா தலங் களுக்கு செல்ல முடிவது இல்லை. இதனால் பல இடங்களை உரிய காலத்தில் சுற்றிப்பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

ஒருவழிப்பாதை

சேரிங்கிராசில் போக்குவரத்து பாதிப்பு காரணமாக அணிக்கொரை, கோழிப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அரசு பஸ்கள் பிரிக்ஸ் பள்ளி சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. 

ஊட்டியில் சில பாதைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருந்தும் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 

எனவே ஊட்டியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்