நீலகிரியில் ஒரு லிட்டர் டீசல் 100ஐ கடந்தது
நீலகிரியில் ஒரு லிட்டர் டீசல் 100 கடந்தது
ஊட்டி
பெட்ரோலை தொடர்ந்து நீலகிரியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ கடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெட்ரோல் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், இந்தியா வில் எரிபொருள் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த ஜூன் 18-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ.105-ஐ நெருங்கியது.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைக்கப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
ஆனாலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ஏறுமுகமாக உள்ளது. ஊட்டியில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 பைசா உயர்ந்து ரூ.104.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.104.73 க்கு விற்பனை யானது.
பெட்ரோல் விலை ரூ.105-ஐ நெருங்கி உள்ளதால் வாகனங்களில் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
டீசல் ரூ.100
இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கி வந்தது. ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.100.34-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.99.95-க்கு விற்பனையானது.
நேற்று 39 பைசா அதிக ரித்து பெட்ரோலை தொடர்ந்து டீசலும் ரூ.100-ஐ கடந்து உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஒரு லிட்டர் டீசல் ரூ.11-ம், ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட ரூ.20-ம் அதிகரித்து உள்ளது.
வாடகை உயர்வு
சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சரக்கு வாகனங்கள், லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு முக்கிய எரிபொருளாக டீசல் உள்ளது.
டீசல் விலை உயர்ந்து உள்ளதால், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வாடகை கட்டணம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.
விலை உயர்வால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.