தூத்துக்குடி அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை; மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி அருகே பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கியது.

Update: 2021-10-16 13:27 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நேற்று மாஜிஸ்திரேட்டு விசாரணை தொடங்கியது.

பிரபல ரவுடி 

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே உள்ள திரவியபுரத்தை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 44). பிரபல ரவுடியான இவரை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் போலீசார் தேடி வந்தனர். 
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் இருந்து கோவளம் கடற்கரைக்கு செல்லும் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் துரைமுருகன் தனது கூட்டாளிகள் ஆரோக்கியராஜ், ராஜா ஆகியோருடன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் போலீஸ்காரர் டேவிட்ராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

சுட்டுக்கொலை

அங்கு பாழடைந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது தப்ப முயன்ற துரைமுருகன் அரிவாளால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் டேவிட்ராஜா ஆகியோரை வெட்டினார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, ரவுடி துரைமுருகனை நோக்கி 3 தடவை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் குண்டு பாய்ந்து காயம் அடைந்த துரைமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் டேவிட்ராஜா ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமாதேவி நேற்று விசாரணையை தொடங்கினார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த துரைமுருகனின் உடலை பார்வையிட்டார். தொடர்ந்து அவரது தாய் சந்தனம், சகோதரிகள் கன்னியம்மாள், ராமலட்சுமி, ராதாலட்சுமி, முனீசுவரி, உறவினர்கள் கண்ணன், உதயகுமார், முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். 
மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் டேவிட்ராஜா ஆகியோரிடம், துரைமுருகனுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல் குறித்து கேட்டு வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார். பின்னர் துரைமுருகனின் உடலில் குண்டுகள் பாய்ந்து இருப்பது தொடர்பாக டாக்டர்களுடன் சுமார் 20 நிமிடம் விளக்கங்களை கேட்டு பெற்ற பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

உடல் அடக்கம்

இதைத்தொடர்ந்து துரைமுருகன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாலை 3.10 மணிக்கு மாஜிஸ்திரேட்டு உமாதேவி முன்னிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியது. 2 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. 
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, அவரது உடல் தாய் சந்தனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துரைமுருகனின் உடல் எடுத்து செல்லப்பட்டு தூத்துக்குடியில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்