டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட முயற்சி: ஒன்றரை லட்சம் தப்பியது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 விற்பனையாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்பார்வையாளர் சுப்பிரமணி, விற்பனையாளர் செல்லப்பன் ஆகியோர் இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல டாஸ்மாக் பணியாளர்கள் கடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.
இதையடுத்து உள்ளே இருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 4 மதுபாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. ஆனால் கடைக்குள் தனியாக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் கண்காணிப்பு காட்சி பதிவுகள் மூலம் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.