காரில் கடத்திய 26 கிலோ குட்கா பறிமுதல்
நாகர்கோவில் அருகே காரில் கடத்திய 26 கிலோ குட்கா, ரூ.5½ லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் அருகே காரில் கடத்திய 26 கிலோ குட்கா, ரூ.5½ லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாகன சோதனை
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் மற்றும் போலீசார் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காைர வழிமறித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர்.
26 கிலோ குட்கா சிக்கியது
அப்போது காரில் மூடை மூடையாக 26 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரின் முன் பகுதியில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் பணமும் இருந்தது.
விசாரணையில், இவர்கள் வெளியூர்களில் இருந்து குட்காவை கடத்தி வந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்த தகவல் வெளியானது. இதையடுத்து காரில் இருந்த 26 கிலோ குட்கா, ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த குலசேகரத்தை சேர்ந்த முகமது ஷபிக் (வயது 46), செய்யது அலி (40), அம்ஜத் (36) மற்றும் பாலராமபுரத்தை சேர்ந்த சபீர்கான் (35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் அருகே 26 கிலோ குட்காவுடன் ரூ.5½ லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.