பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க கால நீட்டிப்பு- மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-15 22:14 GMT
ஈரோடு
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தெரிவித்து உள்ளார்.
கால நீட்டிப்பு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவர்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும், உரிமங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உரிய ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களில் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கடந்த மாதம் 30-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்ய வருகின்ற 22-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒப்புகைச்சீட்டு
அதன் பின்னர் விண்ணப்பங்கள் எந்த காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்த மனுதாரர்கள், பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டுடன் புல வரைபடம், கிரயப்பத்திர நகல்கள், சேவைக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம் உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்