ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேரள பேராசிரியையிடம் சில்மிஷம்; விமானப்படை வீரர் கைது
ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேரள பேராசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு
ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேரள பேராசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 29 வயது பெண், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், தசரா விடுமுறைக்காக பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி பெங்களூருவில் இருந்து கோட்டயம் செல்வதற்காக ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு செல்வதற்காக அந்த பேராசிரியை ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த அதே பெட்டியில் எதிரே வாலிபர் ஒருவர் பயணம் செய்தார்.
சில்மிஷம்
இந்த ரெயில் சேலம் அருகே வந்து கொண்டு இருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, அந்த வாலிபர் பேராசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கல்லூரி பேராசிரியை அவரை எச்சரித்துள்ளார். இதற்கிடையில் அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
விமானப்படை அதிகாரி
தொடர்ந்து அந்த வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், கல்லூரி பேராசிரியை ஈரோடு ரெயில் நிலையத்தில் இறங்கி, ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் நடந்ததை கூறி அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். அதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே உள்ள சத்கோஹா பகுதியை சேர்ந்த பிரப்ஜோட் சிங் (வயது 28) என்பதும், இவர் இந்திய விமானப்படையில் ஹவில்தாராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர், பேராசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, விமானப்படை வீரர் பிரப்ஜோட்சிங்கை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் கூறும்போது, ‘கல்லூரி பேராசிரியையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விமானப்படை வீரர் குறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் விமானப்படை உயர் அதிகாரிகள் பிரப்ஜோட் சிங்கிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்றனர்.