தேங்கிநிற்கும் கழிவுநீர்
ஈரோடு அருகே உள்ள எலவமலை ஊராட்சி அண்ணா நகரில் சுமார் 2 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை தண்ணீரும் கழிவு நீருடன் சேர்ந்து பாதையில் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, அண்ணா நகர். எலவமலை
குண்டும் குழியுமான சாலை
கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு எம்.ஜி.ஆர். நகரில் மெயின் வீதியில் மழை தண்ணீர் தேங்கி பாதை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சில இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதையை சரிெசய்து கொடுப்பார்களா?
பொதுமக்கள், வெள்ளோட்டம்பரப்பு.
ஆபத்தான நுழைவு பாலம்
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே கரூர் ரோட்டில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. கரூர், திருச்சியில் இருந்து வரும் வாகனங்களும், ஈரோடு பஸ்நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் வாகனங்களும் இந்த நுழைவு பாலத்தை கடந்துதான் செல்கின்றன. அதனால் இந்த பாலத்தின் கீழ் எப்போதும் வாகன நெருக்கடி இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட இந்த பாலத்தின் கீழ் உள்ள ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழிகளில் இறங்கி தடுமாறி விழுகிறார்கள். பெரிய அளவில் விபத்து நடக்கும் முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆபத்தான நுழைவு பால ரோட்டை சீரமைக்க வேண்டும்.
பாலமுருகன், ஈரோடு.
அடிப்படை வசதி
ஈரோடு ஸ்ரீபுரம் குமிளம்பரப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை, தார்ரோடு என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குமிளம்பரப்பு
கிணறு தூர்வாரப்படுமா?
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாண்டியன் வீதியில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் இருப்பது தெரியவில்லை. மாநகராட்சி சார்பில் இந்த கிணற்றை தூர்வாரினால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்துவார்கள். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பச்சயப்பன், ஈரோடு.
நிழற்குடை அமைக்கப்படுமா?
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் ஈரோட்டுக்கும், கரூருக்கும் பஸ்களில் வேலைக்கு சென்று வருகிறார்கள். ஆனால் பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருப்போர் வெயிலில் வாடுகிறார்கள். மழையில் நனைகிறார்கள். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊஞ்சலூர் பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பார்களா?
மதுரைவீரன், ஊஞ்சலூர்.