தலைவாசல் அருகே வங்கி இ-சேவை மைய பெண் ஊழியர் அடித்துக்கொலை

தலைவாசல் அருகே வங்கி இ-சேவை மைய பெண் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-10-15 22:00 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே வங்கி இ-சேவை மைய பெண் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். 
பெண் ஊழியர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 57). இவர் தலைவாசலில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவியான சித்ரா (45) வீரகனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இ-சேவை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 2-வது மனைவியான கவிதா கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். அழகுவேல் தனது முதல் மனைவி சித்ரா மற்றும் 2 மகன்களுடன் நாவலூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சித்ரா வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர்  போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புகார்
இதனிடையே சித்ராவின் தந்தையான கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, வீரகனூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் தனது மகளை அடித்துக்கொலை செய்து வீசியுள்ளனர். எனவே அவரது சாவு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகுவேல் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைவாசல் அருகே  வங்கி இ-சேவை மைய ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பர\பரப்பை எற்படுத்தியது.

மேலும் செய்திகள்