சேலத்தில் ஆர்ப்பாட்டம்: மோடியின் உருவபொம்மையை எரிக்க முயற்சி
சேலத்தில் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சேலம்:
சேலத்தில் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். லக்கிம்பூர் கேரி படுகொலைக்கு காரணமாக இருந்த மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது திடீரென பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பதற்காக அங்கு கொண்டு வரப்பட்டது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரபரப்பு
இதையடுத்து போலீசார் மோடியின் உருவ பொம்மையை அவர்களிடம் இருந்து பறித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சேலத்தில் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.