தேசியக்கொடி போன்ற மூவர்ண விளக்குளால் ஜொலித்த பிரகதீஸ்வரர் கோவில்
தேசியக்கொடி போன்ற மூவர்ண விளக்குளால் பிரகதீஸ்வரர் கோவில் ஜொலித்தது.;
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 1000 வருடங்களுக்கு முன்பு மாமன்னர் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது ஆகும். இங்குள்ள சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது. 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்டு கம்பீரமாக சிவலிங்கம் காட்சி அளிக்கிறது. உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இக்கோவில் சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியதை கொண்டாடும் விதமாகவும், தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்திய அளவில் 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவிலில் இந்திய தொல்லியல் துறை மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் விதமாக தேசியக்கோடி போன்ற நிறங்களிலான விளக்குகளின் ஒளியால் கோவில் பகுதி ஜொலித்தது. நேற்று முன்தினம் இரவு அதனை ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.