மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
சாக்லெட், குளிர்பானங்கள், சிகரெட்டும் திருட்டு
பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம்(வயது 40). இவர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வைத்தியலிங்கம் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் கடையில் கல்லாவில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் சாக்லெட், பால் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். ஏற்கனவே இந்த மளிகை கடையில் கடந்த ஆண்டு மர்மநபர்கள் பணம், பொருட்களை திருடிச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கடையில் திருட்டு முயற்சி
இதேபோல் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே அவ்வையார் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் மணிகண்டன் (26) நடத்தி வரும் மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடையில் பணம் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடையில் திருட்டு நடந்த சம்பவம் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் இந்திரா நகரை சேர்ந்தவர் தர்மராஜ்(45). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்குள் நேற்று அதிகாலை புகுந்த 3 மர்மநபர்கள் ஓட்டலில் கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும், செல்போனையும் திருடியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த ஓட்டல் ஊழியர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். இதனால் அவர்கள் தாங்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை எடுக்காமல் தப்பி ஓடினர். அவர்களை ஓட்டல் ஊழியர்கள் துரத்தி சென்று, ஒருவரை பிடித்தனர். ஆனால் அவர் தனது சட்டையை கழற்றிவிட்டு ஓட்டல் ஊழியர்களிடம் இருந்து தப்பி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த பெரம்பலூர் போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மர்மநபர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஓட்டலில் திருட்டில் ஈடுபட்டவர்களே மளிகை கடையிலும் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.