கோவில்களில் நவராத்திரி வழிபாடு நிறைவு
கோவில்களில் நவராத்திரி வழிபாடு நிறைவுபெற்றது.
பெரம்பலூர்:
நவராத்திரி வழிபாடு
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் 40-வது ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் ஆயுதபூஜையன்று அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விஜயதசமியான நேற்று உற்சவ அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அரசு அனுமதியளித்ததால், நேற்று சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் பக்தர்கள் பூத்தட்டுகளில் சுமந்து வந்த பூக்கள் மூலவருக்கு சாற்றப்பட்டது.
அம்பு போடுதல் நிகழ்ச்சி
இதைத்தொடர்ந்து உற்சவ அம்மன் புறப்பாடு மற்றும் கோவில் வளாகத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறையின்படி இந்த ஆண்டு கோவிலில் லட்சார்ச்சனை விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தான் நடை திறக்கப்படும்.
ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விளந்தை கிராமத்தில் தர்மசம்வர்த்தினி சமேத மேல அகத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி உற்சவருக்கு தினமும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. நவராத்திரியின் நிறைவு நாளான நேற்று பண்டாசுரன் என்ற அரக்கனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அம்பாள் எழுந்தருளினார். எதிரில் பண்டாசுரன் வடிவில் ஒரு வாழை மரம் கட்டப்பட்டிருந்தது. அம்பாள் 3-வது முறை விட்ட அம்பில் பண்டாசுரனை வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அம்பாளுக்கு வெண்பட்டு சார்த்தி, கல்கண்டு பால் நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதில் ஆண்டிமடம், விளந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி வழிபாட்டையொட்டி நேற்று முன்தினம் விசாலாட்சி அம்மன் சரஸ்வதி கோலத்தில் காட்சி தந்தார். மேலும் அப்பகுதியில் மழைபெய்தபோது கோவில் கோபுரத்தின் வட கிழக்கு மூலையில் மின்னல் ஒளி ஏற்பட்டது. இக்காட்சி பார்த்தவர்களை பரவசப்படுத்தியது. கோவிலில் நேற்று அசுரனை அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக மற்ற கோவில்களில் அம்மன் துர்க்கை கோலத்தில் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் முருகப்பெருமான் கையில் வில் அம்புடன் வில்லேந்தி வேலவராக சம்ஹார மூர்த்தியாக காட்சி அளித்து, அசுரவதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை, பஞ்ச ஆரத்தி நடைபெற்றது. அரசின் அனுமதியை தொடர்ந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் பஸ் நிலையம் அருகே செட்டி ஏரிக்கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று பழங்கள் மற்றும் காய்கறிகள் அலங்காரத்தில் காளியம்மனாக காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.