துவரங்குறிச்சி
சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று முன்தினம் இரவு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த அமளூரைச் சேர்ந்த முருகன்(வயது 40) ஓட்டினார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாணிக்கம்பிள்ளைசத்திரம் என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி நான்கு வழிச்சாலையில் நடுவில் உள்ள தடுப்புச்சுவரை தாண்டி மறுபக்க சாலைக்கு சென்றது. அப்போது எதிரே கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் மீது லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் முருகன், பஸ் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம், கருங்குளத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(56), கண்டக்டர் கடலூர் மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த மாயாவி(35) மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த சதீஷ்குமார்(35), அவரது மனைவி பானு(28), பெரியகுளத்தைச் சேர்ந்த மருதுபாண்டி(23), தேனி மாவட்டம், கரட்டுப்பட்டியைச் சேர்ந்த சுதாராணி(35), இவரது மகள் தங்கமணி(7), பெரியகுளம் ராணி(55) உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாரி டிரைவர் முருகன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.