மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலம்

மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று மைசூரு அரண்மனையில் கோலாகலமாக நடந்தது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை யானைகள் புடைசூழ அபிமன்யு யானை சுமந்து சென்றது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Update: 2021-10-15 20:46 GMT
மைசூரு:
  
மைசூரு தசரா விழா

  கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. இது கர்நாடக மக்களால் ‘நாட ஹப்பா’ என்றும், ‘ஆடம்பர பண்டிகை’(ராயல் பெஸ்டிவல்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோலாகல விழா நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி பண்டிகையையொட்டி 10 நாட்கள் வெகு விமரிசையாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 410 தசரா விழாக்கள் நடைபெற்று உள்ளது. இந்த ஆண்டுக்கான தசரா விழா அக்டோபர் மாதம் 7-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும் என்றும், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

  அதாவது கர்நாடக மக்களின் காவல் தெய்வமாக கருதப்படும் மைசூரு அருகே சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், மக்களை வாட்டி-வதைத்து கொடுங்கோல் ஆட்சி செய்த மகிஷாசூரன் எனும் அரக்க குணம் கொண்ட மன்னனை போரிட்டு வதம் செய்த நாள்தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜயநகர பேரரசு

  மேலும் மைசூருவை ஆண்ட விஜயநகர பேரரசின் மன்னர் ஒருவர் போருக்கு செல்லும்முன் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கிவிட்டு சென்றதாகவும், போரில் வெற்றிபெற்று திரும்பிய அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வெகு விமரிசையாக விழா எடுத்ததுதான் மைசூரு தசரா விழாவாக கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

  தசரா விழா கடந்த 1610-ம் ஆண்டு விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில் மன்னர் நால்வடிராஜா உடையாரால் மைசூரு சமஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கப்பட்டணாவில்(தற்போது மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்டது) மகாநவமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் மைசூருவை ஆட்சி செய்த யது வம்ச மன்னர்களால் தசரா விழா நடத்தப்பட்டு வந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மைசூரு தசரா விழா கர்நாடக அரசு சார்பில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

411-வது தசரா விழா

  தற்போது கொண்டாடப்படும் தசரா விழா 411-வது தசரா விழா ஆகும். இந்த ஆண்டும் அரசு அறிவித்தபடி தசரா விழா 7-ந் தேதி மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவை மக்களால் போற்றப்படும் ஒருவர் தொடங்கி வைப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு விழாவை முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து, அம்மன் மீது மலர்களை தூவி தொடங்கி வைத்தார்.

  கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தசரா விழாவையொட்டி நடைபெறும் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. மைசூரு அரண்மனையில் மட்டும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதிலும் குறிப்பிடத்தக்க கலைஞர்கள் மட்டுமே கலந்து கொண்டு கர்நாடகத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் வகையிலான பாரம்பரிய, கலாசார கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா விதிகளை பின்பற்றி தசரா விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கலச தீர்த்தம்

  தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள், பூஜைகள், சம்பிரதாயங்கள் ஆகியவை வழக்கம்போல் நடந்தன. விழா தொடங்கிய நாள் முதல் நேற்று முன்தினம் வரை 9 நாட்களும் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் ராஜ உடையில் கம்பீரமாக அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். அதேபோல் நவராத்திரியையொட்டி அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த கொலுவுக்கும் பல்வேறு பூஜைகள் நடந்தன.

  ஆயுத பூஜை பண்டிகை அன்று காலை 7 மணிக்கு இளவரசர் யதுவீர், அம்பா விலாஸ் அறையில் ராஜகுரு மற்றும் மகாராணி பிரமோதா தேவி ஆகியோருக்கு பாதபூஜை செய்தார். அதனை தொடர்ந்து சண்டி ஹோமம், கணபதி பூஜை, நவகிரக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 8 மணிக்கு கோடி சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் பன்னி மரத்துக்கு வீர வாளை வைத்து பூஜை செய்தார். இதையடுத்து பட்டத்து யானை, குதிரை ஆகியவை புடைசூழ தங்கப்பல்லக்கில் ஊர்வலமாக சென்று கலச தீர்த்தம் கொண்டு வந்தார்.

தனியார் தர்பார்

  பின்னர் அரண்மனை கட்டிடத்திற்குள் மல்யுத்த போட்டி நடக்கும் மைதானத்தில் வைத்து ஆயுத பூைஜயை நிறைவேற்றினார். அதாவது அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரத்யேக மேடையில் நின்று பல்லக்கு, பீரங்கி, இரும்பு ஆயுதங்கள், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், பொருட்களுக்கு புனித தீர்த்தம் தெளித்து, பூக்களை தூவி பூஜை செய்தார். பின்னர் பட்டத்து யானை, குதிரை, ஒட்டகம், பசுமாடு ஆகியவற்றுக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தார். இந்த சந்தர்ப்பத்தில் பட்டத்து யானை உள்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளும் வரிசையாக வந்து நின்றன. அவற்றுக்கு இளவரசர் யதுவீர் பூஜை செய்தார்.

  அதையடுத்து தனியார் தர்பார் நடந்தது. இதற்காக தர்பார் ஹாலில் பிரத்யேகமாக ஜோடிக்கப்பட்ட தங்க, வைர சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் ராஜ உடையில் அரை மணி நேரம் தர்பார் நடத்தினார். அப்போது அவரை மன்னர்கால முறைப்படி சிப்பாய்கள் ராஜ கோஷங்களை எழுப்பியபடி தர்பாருக்கு அழைத்து வந்தனர். மேலும் யதுவீர் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது ராஜ கோஷங்களை எழுப்பினர். தர்பார் முடிந்ததும் நவராத்திரி கடைசி நாளின் பூஜைகளை இளவரசர் யதுவீர் முடித்து வைத்தார். இதில் அரண்மனை ராஜகுரு, ராணி பிரமோதாதேவி, இளவரசி திரிஷிகா குமாரி, குட்டி இளவரசர் ஆத்யவீர் மற்றும் மன்னர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய பூஜைகள்

  நேற்று விஜயதசமியையொட்டி மைசூரு அரண்மனையில் பாரம்பரியப்படி பல்வேறு பூஜைகள் நடந்தன. இதையொட்டி அதிகாலை 4.40 மணிக்கு அரண்மனையில் பூஜைகள், ஹோமங்கள் தொடங்கின. ஹோமம் மற்றும் பூஜையில் இளவரசர் யதுவீர் கலந்து கொண்டார். காலை 5.45 மணிக்கு பட்டத்து யானை உள்பட அனைத்து யானைகளும் அழைத்து வரப்பட்டன. அதேபோல் குதிரைகள், பசுக்களும் அழைத்து வரப்பட்டன. காலை 6.13 மணி முதல் 6.32 மணி வரை அவைகளுக்கு பாரம்பரிய, கலாசார முறைப்படி பூஜைகள் நடந்தன.

  பின்னர் இளவரசர் யதுவீர் வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக சென்று அரண்மனை வளாகத்தில் உள்ள ஜெய் புவனேஸ்வரி கோவிலில் உள்ள பன்னி மரத்திற்கு பூஜை செய்தார். பின்னர் தனியார் தர்பாரும் நடத்தினார். அதையடுத்து அரண்மனை வளாகத்தில் உள்ள அம்பா விலாஸ் அறையில் அமைந்திருக்கும் விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த போட்டி நடப்பதாக இருந்தது. அதாவது. இந்த போட்டி மொட்டைத்தலையில் கத்தியால் தாக்கி ரத்தம் சிந்தும் போட்டியாகும். இந்த போட்டியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே பாரம்பரிய முறைப்படி கலந்து கொள்கிறார்கள். அவர்கள் கத்தியுடன் மோதிக்கொள்ளும் போது யாருடைய தலையில் ரத்தம் வருகிறதோ அவர் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படுவார். அத்துடன் விளையாட்டும் முடிவடைந்து ஜம்பு சவாரி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மல்யுத்த கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மல்யுத்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தங்க அம்பாரி

  பின்னர் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதுஒருபுறம் இருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இதற்காக சாமுண்டி மலையில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்க சிலை ரகசியமாக எடுத்து வரப்படும். ஆனால் இந்த ஆண்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனையில் இருந்து பன்னி மண்டபம் வரை ரத்து செய்யப்பட்டதால், சாமுண்டி மலையில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

  சாமுண்டி மலையில் இருந்து அலங்கார வண்டிகள் அணிவகுக்க, பல்வேறு கலைக்குழுவினரின் ஆடல், பாடல், நடன ஊர்வலத்துடன் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் ஊர்வலமாக கோலாகலமாக எடுத்து வரப்பட்டது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண முடியாத மக்கள் அம்மன் சிலை ஊர்வலத்தை பார்த்து மெய்சிலிர்த்தனர். இதனால் சாமுண்டி மலையில் இருந்து அரண்மனை வளாகம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் இருபுறமும் நின்று அம்மனை தரிசித்தனர். மேலும் ஆச்சரியமாகவும் பார்த்து ரசித்தனர். இந்த ஊர்வலத்தில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்தன. மங்கள இசை வாத்தியம், மேள-தாளங்கள், போலீஸ் பேண்ட் இசைக்குழு என அனைத்தும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடனமாடினார்

  இந்த ஊர்வலத்தை மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் சாமுண்டி மலையில் இருந்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் ஊர்வலம் முழுவதும் வந்து, நடன குழுவினருடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். இதற்கிடையே அரண்மனையில் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. அதையடுத்து அம்மன் சிலை ஊர்வலம் அரண்மனையை வந்தடைந்தது. இந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அரண்மனைக்கு வந்து வழக்கம்போல் அரண்மனை முன்பு உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் வீற்றிருக்கும் நந்தி சிலைக்கும், தூணுக்கும் சிறப்பு பூஜை செய்தார். அதையடுத்து நந்தி சிலையுடன் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

  அதையடுத்து அரண்மனையில் வலது பகுதியில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை தயாராக இருந்தது. அதன்மீது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி வைக்கப்பட்டது. அதன்பின் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்க சிலை வைக்கப்பட்டது. முன்னதாக அம்மன் சிலைக்கு அரண்மனை அர்ச்சகர்கள், குருக்கள் பூஜைகள் செய்தனர். மேலும் அம்மன் சிலையை அலங்கரித்தனர்.

ஜம்பு சவாரி ஊர்வலம்

  இந்த பணிகள் முடிவடையும் முன்பு அரண்மனை வளாகத்தில் கர்நாடகத்தின் கலாசார நடனமான டொள்ளு குனிதா உள்பட பல்வேறு கலைக்குழுவினர், 6 அலங்கார வண்டிகள், போலீஸ் படை, குதிரைப்படை உள்பட பல்வேறு பிரிவு படையினரின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முடிந்ததும் காவேரி, விஜயலட்சுமி ஆகிய யானைகள் புடைசூழ தங்க சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு அபிமன்யு யானை கம்பீரமாக வீறுநடைபோட்டு ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கும் மேடை அருகே வந்து நின்றது. சரியாக மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் சுபா மீன லக்கனத்தில் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, இளவரசர் யதுவீர், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மேயர் சுனந்தா பாலநேத்ரா, கலெக்டர் பகாதிகவுதம் ஆகியோர் மேடையில் நின்று மங்கள இசை முழங்க சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்கள் தூவி தொடங்கி வைத்தனர்.

  அதையடுத்து போலீசாரின் பேண்ட் இசைக்குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அப்போது அபிமன்யு யானை, விஜயலட்சுமி மற்றும் காவேரி யானைகள் உள்ளிட்டவை தும்பிக்கையை மேலே தூக்கி நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வீர வணக்கம் செலுத்தின. அதன்பின் அரண்மனை வளாகத்தில் சிறிது தூரத்தில் 21 முறை பீரங்கிகள் வெடிக்கப்பட்டன. அதன்பின் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கி நடந்தது.

அரண்மனையில் மட்டுமே நடந்தது

  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டும் மைசூரு அரண்மனை வளாகத்திலேயே 800 மீட்டர் தூரம் மட்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 500 பேர் மட்டுமே கண்டுரசிக்க அரசு அனுமதித்து இருந்தது. ஆனால் அரண்மனை வளாகத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் குவிந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை பார்த்து ரசித்தனர். இதில் மந்திரிகள் ஆர்.அசோக்,ஈசுவரப்பா, கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ராமதாஸ், நாகேந்திரா, ஹர்ஷவர்தன், நிரஞ்சன்குமார், பிரதாப் சிம்ஹா எம்.பி. மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

  ஜம்பு சவாரி ஊர்வலம் மாலை 6 மணியளவில் முடிந்தது. அதாவது ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை கோட்டை அருகே பலராமா நுழைவு வாயில் வரை வந்து நின்றது. அத்துடன் ஜம்பு சவாரி ஊர்வலம், நவராத்திரி விழா, தசரா விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வந்தன. அதையடுத்து அரண்மனை முழுவதும் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன. மின்விளக்கு அலங்காரத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை சுற்றிலும் குவிந்தனர். இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அலைமோதியது. இரவு 10 மணி வரை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அரண்மனை மற்றும் நகரில் உள்ள மின்விளக்கு அலங்காரங்களை பார்த்து ரசித்தனர். ஜம்பு சவாரி ஊர்வலத்தையொட்டி மைசூரு அரண்மனையை சுற்றிலும், மைசூரு மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

15 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

இந்த ஆண்டு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலம் எளிமையாக நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண அரண்மனையில் சுமார் 4 ஆயிரம் பேர் குவிந்திருந்தனர். மேலும் சாமுண்டீஸ்வரி அம்மன் ஊர்வலத்தை காண 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிநெடுகிலும் திரண்டிருந்தனர். கோட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியிலும் ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். 

இதனால் மொத்தம் இவ்விழாவை சுமார் 15 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். இதன்காரணமாக இந்த ஆண்டு விழா ஆடம்பரமாகவே நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்