மருத்துவமனை வளாகத்தில் தூங்கியவர் மீது ஆம்புலன்ஸ் ஏறியதில் பலி

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர் மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியதில் பலியானார்.

Update: 2021-10-15 19:49 GMT
தென்காசி:
தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர் மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியதில் பலியானார்.

கூலித்தொழிலாளி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 40). கூலித்தொழிலாளி. 

இவரது உறவினர் பெண் ஒருவர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்ப்பதற்காக கடந்த 1-ந் தேதி பாலசுப்பிரமணியன் இரவில் வந்தார்.

ஆம்புலன்ஸ் ஏறியது

இரவு நீண்டநேரம் ஆகிவிட்டதால் பாலசுப்பிரமணியன் மருத்துவமனை வளாகத்திலேயே தரையில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவு 1-30 மணியளவில் ஒரு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த ஆம்புலன்ஸ், தரையில் படுத்திருந்த பாலசுப்பிரமணியன் வயிற்றில் ஏறி இறங்கியது. 

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவருடைய உறவினர் முருகன் மற்றும் சிலர் சத்தம் போட்டனர். 

பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஏற்கனவே தென்காசி போலீசார், விபத்தில் காயம் ஏற்பட்டதற்கான பிரிவில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது விபத்து மரண பிரிவுக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்