புகார்பெட்டி

தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

Update: 2021-10-15 19:48 GMT
தடுப்பு சுவர் வேண்டும் 

மதுரை அய்யர் பங்களா மூன்று மாவடி பகுதியில் மகாலட்சுமி நகர் அருகில் உள்ள சாலை பிரிவில் சாக்கடை கால்வாய் தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். 
இலங்கை அரசன், மதுரை. 

 தேங்கி நிற்கும் மழைநீர் 

சிவகங்கை மாவட்டம் கீழப்பழங்குடி ஊராட்சி அம்பேத்கர் காலனியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல தேங்கி நிற்கிறது. அதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
பொதுமக்கள், கீழப்பழங்குடி. 
அடிப்படை வசதி தேவை 
மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியம் டி.கிருஷ்ணாபுரத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா? 
பாண்டி, சேடபட்டி. 

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்காபுரத்தை அடுத்த ஓ.கோவில்பட்டியில் குப்பை தொட்டிகள் இல்லை. இதன் காரணமாக சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து, குப்பைகளை முறையாக அள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், ஓ.கோவில்பட்டி. 
மின்பற்றாக்குறை தீர்க்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி‌யில் உள்ள பொன்குளம் மற்றும் 9-வது வார்டு சில பகுதிகளில் மின்பற்றாக்குறை உள்ளது. இதனால், அங்குள்ள வீடுகளுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரூக் உசேன், பனைக்குளம்.

வீணாகும் குடிநீர்

மதுரை அரசரடி பாரதிதாசன் சாலையில் (டிராவலர்ஸ் பங்களா ரோடு) குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.
ஆபித், மதுரை.
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்
மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் செல்லூர் கண்மாய் கரை பகுதியில் பழைய பயன்படுத்தப்படாத ஓட்டை, உடைசல் கனரக வாகனங்களும், லாரி டிராக்டர்களும் அணிவகுத்து நிற்கின்றன. மறுபுறம் ரோட்டில் குப்பைகள், டப்பாக்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த பகுதி வாகன நெருக்கடியால் அவதிக்கு உள்ளாகிறது. விபத்துகள் நடக்கின்றன. எனவே செல்லூர் கண்மாய் கரையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நீண்ட நாளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
அபுபக்கர், மீனாம்பாள்புரம்.

சேதமடைந்த குடிநீர் குழாய் 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் பின்புறவாசலில் (ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் செல்லும் வழி) குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால், தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹரிஹரன், சிவகாசி.

சேதமான சாலை 

மதுரை பழங்காநத்தம் அன்பு நகர் முல்லை வீதி ரோடு சேதம் அடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேறும், சகதியுமான சாலையால் மண்ணில் புதைந்து நிற்கின்றன. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சுப்ரமணியம், மதுரை.

மேலும் செய்திகள்