கோவில்களில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
வாரத்தின் அனைத்து நாட்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
விருதுநகர்,
கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் தற்போது வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் நேற்று திறக்கப்பட்டன. பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று விஜயதசமி தினத்தன்று கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனத்துக்காக திரண்டனர். எனினும் கோவில்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவிலில் வழக்கமாக விஜயதசமியன்று சொக்கநாதர் பாரி வேட்டைக்காக நகருக்கு வெளியே உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா விதிமுறைகள் உள்ளதால் கோவில் வளாகத்திலேயே பாரிவேட்டை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகரின் விஜயதசமி அன்று நடைபெறும் மகா நோன்பு திருவிழா நடைபெறவில்லை.
சுப்புலட்சுமி
எல்லா நாட்களுக்கும் வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து பக்தர்கள் கூறியதாவது:-
வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வது மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. விஜயதசமி நன்னாளில் மீண்டும் வார இறுதி நாட்களில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தது மனநிறைவை தருகிறது. இதற்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி.
மணிகண்டன்
தமிழகத்தில் கொரோனா பரவல் கடுத்தப்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 2 மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல திருவிழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வு மனநிறைவை தருகிறது.
ராமச்சந்திரன்
தமிழக அரசு அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இது பக்தர்கள் மனதில் மிகவும் உற்சாகத்தையும், மனநிம்மதியும் அளிக்கிறது. பக்தர்களின் மனநிைலயை அறிந்து அறிவுப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.
ரெங்கநாயகி
தமிழக அரசு கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாளை நேரில் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பக்தர்கள் நேற்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை காலமாக இருப்பதாலும், நவராத்திரி விழாவாக இருப்பதாலும் தாயாரை தரிசிப்பது மகிழ்ச்சி தான்.
மகேஸ்வரி
நீண்ட நாட்களுக்கு பிறகு கடைசி வெள்ளிக்கிழயான நேற்று இருக்கன்குடி மாரியம்மன்கோவிலில் அம்மனை நேரில் தரிசித்தேன். அரசின் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிவிட்டு, முக கவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.