சிதம்பரத்தில் துணிகரம் அண்ணாமலை பல்கலைக்கழக கண்காணிப்பாளர் வீட்டில் ரூ.11 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கண்காணிப்பாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-15 17:33 GMT
அண்ணாமலைநகர், 

பல்கலைக்கழக கண்காணிப்பாளர்

சிதம்பரம் விபிஷ்ணபுரம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 59). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜன் கடந்த 13-ந் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுந்தர்ராஜன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.

நகை-பணம் கொள்ளை

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சுந்தர்ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிய அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 33 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. சுந்தர்ராஜன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. 

பரபரப்பு

இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து சுந்தர்ராஜன், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்துச் சென்றனர். அண்ணாமலைநகர் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்