நவராத்திரி விழாவையொட்டி சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி
நவராத்திரி விழாவையொட்டி சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி
வடவள்ளி
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவின் 9-வது நாளில் நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது ஆகும். இந்த நிகழ்ச்சி அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதுபோன்று கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நேற்று மதியம் 12.30 மணிக்கு நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளினார்.
அம்பு விடும் நிகழ்ச்சி
பின்னர் முருகப்பெருமான் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அங்கு வன்னிமரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து முருகப்பெருமான் தனது கையில் இருந்த அம்பை 5 முறை வன்னிமரத்தில் எய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது அங்கு இருந்த பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என முழக்கமிட்டனர். தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி கோவிலை வலம் வந்து முன்மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்தபோதிலும் கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் மலை மீது உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடி நின்றனர்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டது. அவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மருதமலை கோவில் உதவி ஆணையர் (பொறுப்பு) விமலா, மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.