வங்கியில் ரூ 1¼ கோடி பணம் எடுக்க முயற்சி
வங்கியில் ரூ 1¼ கோடி பணம் எடுக்க முயற்சி
கோவை
போலி காசோலை கொடுத்து வங்கியில் ரூ.1¼ கோடி பணம் எடுக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5 பேர் வங்கிக்கு வந்தனர்
கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 5 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் டெல்லியில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரத்து 482-க்கான காசோலையை கொடுத்து பணம் எடுக்க முயன்றனர்.
அது பெரிய தொகை என்பதாலும், அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வங்கி மேலாளர் அந்த காசோலையை சரிபார்த்தார்.
ரூ.1¼ கோடி மாற்ற முயற்சி
அத்துடன் அதை காசோலைைய பரிசோதனை செய்யும் அல்ட்ரா பரிசோதனை கருவியில் வைத்து பரிசோதனை செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக காசோலை கொடுத்ததாக கூறப்பட்ட டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரணை செய்தார்.
அதற்கு அவர்கள் நாங்கள் யாருக்கும் ரூ.1.34 கோடிக்கான காசோலையை கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். இது தொடர்பாக வங்கி மேலாளர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.
போலி காசோலை
அதன்பேரில் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினார் கள். அப்போது அது போலி காசோலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காசோலையை கொண்டு வந்ததில் 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து அங்கு இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கோவை பீளமேடு அண்ணாநகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45), ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீஹரி குமார் (45), காந்திபுரத்தை சேர்ந்த சுதீஷ் (27) என்பது தெரியவந்தது.
5 பேர் கைது
இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து போலியான காசோலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக இருந்த முக்கிய குற்றவாளி களான பார்த்திபன், ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.