திருப்பத்தூர் அருகே பெண்ணை கொலைசெய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறி பிணத்தை வாங்க மறுப்பு
திருப்பத்தூர் அருகே பெண்ணை கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறி பிணத்தை வாங்க மறுத்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதுடன், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பெண்ணை கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறி பிணத்தை வாங்க மறுத்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதுடன், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிணத்தை வாங்க மறுப்பு
திருப்பத்தூர் தாலுகா ஜம்மணப்புதூர் கூட்ரோடு அருகே உள்ள கவுண்டச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அவரது தந்தை முருகேசன் மற்றும் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, பிணத்தை வாங்க மறுத்து, லட்சுமி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார் என்றும் கூறி, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் முருகேசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டடிடம் இதுகுறித்து மனு அளித்துள்ளார்.
தீக்குளிக்க முயற்சி
அதில் எனது மகள் லட்சுமி 11 வருடங்களுக்கு முன்பு சம்பத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மோவிஷா (6), ஸ்ரீ மதி (4) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லை என்று சம்பத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து சம்பத் அடிக்கடி லட்சுமியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் அவரை, கணவர் சம்பத் அழைத்து சென்றார். அங்கு சம்பத்தின் இரண்டாவது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது தகப்பனார் கோவிந்தராஜ், தாய் வசந்தா இவர்கள் அனைவரும் சேர்ந்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். லட்சுமியின் கன்னம் மற்றும் உடலில் காயங்கள் உள்ளது. கணவர் சம்பத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுக்கக்கோரி லட்சுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரிகள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.