காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கோனூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் அமுதா, வனஜா ஆகிய இருவரும் தலா 57 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து மறுநாள் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளர்தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நடந்த குலுக்கல் தேர்வு முறையில் வனஜா தரப்பினர் மட்டும் வந்தனர். அமுதா தரப்பினர் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக கூறி அவர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து வீடியோ பதிவு முன்னிலையில் குலுக்கல் நடைபெற்று அதில் வனஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில் வனஜா வெற்றி பெற்றது செல்லாது என்றும், நாங்கள் இல்லாமல் குலுக்கல் நடத்தியதால் மீண்டும் மறு குலுக்கல் நடத்த வேண்டுமென அமுதா தரப்பினர் கூறி அதிகாரிகளிடம் பிரச்சினை செய்தனர்.
அதற்கு இரு தரப்பினரும் ஒத்துழைத்து வந்தால் மீண்டும் குலுக்கல் நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த வனஜா, தனது வெற்றி அறிவிப்பில் முறைகேடு செய்ய இருப்பதாக கூறி காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு நேரில் வந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
போலீஸ் விசாரணை
இதனிடையே அமுதாதரப்பை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து மீண்டும் மறு குலுக்கல் நடத்த வலியுறுத்தி தன்மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அவரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வீடியோ பதிவு முன்பு குலுக்கல் நடத்தப்பட்டு முறையாக வெற்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மறு குலுக்கல் நடத்த வேண்டுமெனில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி தீர்வு காணுமாறு அதிகாரிகள் கூறினர்.
அதன்பிறகு இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக வனஜா, ரவீந்திரன் ஆகிய இருவரின் மீதும் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.