கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வாலிபர் கைது
பெரியகுளத்தில் இருந்து கேரளாவுக்கு 1½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:
பெரியகுளம் வடகரையில் இருந்து ஜீப் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த இருப்பதாக உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி, அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதில், அந்த ஜீப்பில் 1½ டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரேஷன் அரிசியுடன், ஜீப்பை பறிமுதல் செய்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், வருவாய்த்துறை அலுவலர்கள் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜீப்பை ஓட்டி வந்த கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த முருகன் மகன் சுகந்தன் (வயது 19) என்பவரை கைது செய்தனர்.