தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர்், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-10-15 16:41 GMT
மின்மாற்றி அமைக்கப்படுமா?
காரைக்கால் மாவட்டம் குரும்பகரம் கன்னியம்மன் கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் மின்மாற்றி அமைக்கப்படாததால், வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள்மற்றும் தெருக்களில் உள்ள மின் விளக்குகளில் குறைந்த மின் அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.குறைந்த மின்அழுத்தத்தால் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன.மேலும் அந்தப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அறுவடை எந்திரங்கள் கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரும்பகரம் கன்னியம்மன் கோவில் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தவும், மின்மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பாரதிராஜா, குரும்பகரம், காரைக்கால்.
நோய் பரவும் அபாயம்
திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்த திருவீழிமிழலை பகுதியில் முதல் கட்டளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் முதல் கட்டளை கிராமத்தில் பொது கழிவறை கட்டிட வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் திறந்தவெளி பகுதிகளை பொதுமக்கள் பயன்படுத்துவதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பொதுமக்களின் நலன் கருதி முதல் கட்டளை கிராமத்தில் பொது கழிவறை கட்டிடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
- செந்தமிழன், முதல் கட்டளை.
பொதுகழிவறை கட்டிடம் சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் சர்வ கட்டளை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது கழிவறை கட்டிடம் அமைக்கப்பட்டது.தற்போது இந்த பொது கழிவறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், பராமரிப்பில்லாததால் கழிவறைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வகட்டளை பகுதியில் உள்ள பொதுகழிவறை கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதிமக்களின் எதிர்பார்ப்பாகும்.
- ராகுல், வேதாரண்யம்.
புதிய பாதாள சாக்கடை மூடி அமைக்கப்பட்டது
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் மேல வீதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழியின் முடி உடைந்து கிடந்தது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வந்தனர்.இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயூரநாதர் கோவில் மேல வீதி பகுதியில் உடைந்து கிடந்த பாதாள சாக்கடை குழி மூடியை அகற்றிவிட்டு, புதிதாக மூடி அமைத்துக் கொடுத்துள்ளனர்.இதனால் அந்தப் பகுதி மக்கள் இதை வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் தங்களது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளனர்.
-விக்னேஷ்வர், மயிலாடுதுறை.


மேலும் செய்திகள்