நாகை மீனவர்கள் 23 பேர், முகாமில் அடைப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேர் அங்குள்ள கடற்படை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏ.கே.எஸ்.விஜயன் கூறினார்
வெளிப்பாளையம்:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேர் அங்குள்ள கடற்படை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏ.கே.எஸ்.விஜயன் கூறினார்.
23 மீனவர்கள் சிறைபிடிப்பு
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை திடீர்குப்பத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன்கள் சிவகுமார்(வயது 48), சிவநேசன்(42) ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சிவநேசன், அதே பகுதியை சேர்ந்த சிவராஜ்(35), உத்திராபதி(38) அகத்தியன்(40), சம்பத்(40), கந்தன்(40) உள்பட 23 மீனவர்கள் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11-ந் தேதி அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 13-ந் தேதி இரவு கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்து ெகாண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 23 பேரையும் சிறைபிடித்தனர்.
விசைப்படகுகள் பறிமுதல்
மேலும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடித்த நாகை மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் அங்குள்ள காரைநகர் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் நாகை மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முகாமில் அடைப்பு
இதை தொடர்ந்து நாகை மீனவர்கள், இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நாகை மீனவர்களை வருகிற 28-ந் தேதி(வியாழக்கிழமை) வரை காரை நகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனர், உதவி இயக்குனர் ஆகியோரை சந்தித்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 23 பேரையும், 2 விசைப்படகுகளையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் மீனவ பஞ்சாயத்தார்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொடர்கதையாக உள்ளது
வங்கியில் கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ரூ.1 கோடி மதிப்பில் விசைப்படகுகள் தயார் செய்கிறோம். மேலும் ரூ.20 லட்சத்திற்கு மேல் வலைகள் வாங்குகிறோம். ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
அதாவது டீசல், ஐஸ் கட்டி, தண்ணீர், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் பல நேரங்களில் குறைவான மீன்களே கிடைக்கிறது. செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் பல தடவை திரும்பி வரவேண்டிய நிலையும் உள்ளது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினர் எங்களை(மீனவர்கள்)அடித்து விரட்டுவதும், இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் நாங்கள் தாக்கப்பட்டு வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள், வாக்கி-டாக்கி, செல்போன் உள்ளிட்டவைகளை பறிகொடுத்து விட்டு கரை திரும்புவதும் தொடர்கதையாக உள்ளது. நாங்கள் நிம்மதியுடன் எங்கள் தொழிலை தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் கோரிக்கை
இந்த நிலையில் நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்ற தகவல் அறிந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின். எனவே மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிற வகையில் முதல்-அமைச்சரின் நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.