உல்லாசமாக இருந்ததை இணையதளத்தில் வெளியிடுவதாக மனைவிக்கு மிரட்டல்; என்ஜினீயர் கைது

உல்லாசமாக இருந்ததை இணையதளத்தில் வெளியிடுவதாக மனைவியை மிரட்டிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-15 16:00 GMT
கோவில்பட்டி:
உல்லாசமாக இருந்ததை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மனைவியை மிரட்டியதாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண் புகார்

கோவில்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எனக்கும், கோவில்பட்டி இனாம் மணியாச்சி பஞ்சாயத்து சீனிவாசநகர் 1-வது தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி கோவில்பட்டியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஒரு வாரத்துக்குள் நானும், கணவர் ரமேசும் கத்தார் நாட்டிற்கு சென்று விட்டோம்.

ரூ.10 லட்சம்

அங்கு கணவர் ரமேஷ், எனது பெற்றோருடன் பேசக்கூடாது, மீறிப் பேசினால் ஸ்பீக்கரை போட்டு தான் பேச வேண்டும் என்று கூறி வந்தார். அவர் எப்போதும் போனில் சாட்டிங் செய்து கொண்டே இருப்பார். யாருடன் சாட்டிங் செய்கிறீர்கள் என்று கேட்டால், தினமும் என்னை அடிப்பார்.
நான் குடும்ப நலனை கருத்தில் கொண்டு இதை எனது பெற்றோரிடம் சொல்லவில்லை. நான் வேலை பார்த்து சம்பாதித்த சம்பள பணம் முழுவதையும் அவரது வங்கிக்கணக்குக்கே அனுப்பி வைத்தேன். இதுவரை எனது சம்பள பணம் சுமார் ரூ.10 லட்சம் வரை கொடுத்து உள்ளேன்.

பெண்ணுடன் உல்லாசம்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி நானும், கணவர் ரமேசும் கோவில்பட்டிக்கு வந்தோம். அவர் என்னை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, புதுவேலை விஷயமாக நேர்காணலுக்கு செல்வதாக கூறி எங்கெங்கோ சென்று விட்டு வந்தார். 
இந்த நிலையில் கோவில்பட்டியில் உள்ள எனது அக்காள் வீட்டிற்கு வந்தோம். அங்கு வந்த ரமேஷ் இரவு முழுவதும் செல்போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த நான், அவரது செல்போனை வாங்கி பார்த்தேன். அப்போது அதில் யாரோ ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ மற்றும் அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. அதுகுறித்து நான் கேட்டபோது என்னை அறைக்குள் பூட்டி வைத்து அடித்தார்.

மிரட்டல்

மறுநாள் மாலை 6 மணிக்கு எனது அக்காள் மற்றும் பெரியப்பா மகன் ஆகியோரிடம் கூறியபோது, அவர்கள் எனது கணவரிடம் செல்போனை கேட்டனர். அப்போது அவர் செல்போனை கீழே போட்டு உடைத்து விட்டு, என்னை அவதூறாக பேசி தாக்கினார். அப்போது அக்காளும், அண்ணனும் அவரை தடுத்து என்னை காப்பாற்றி விட்டனர்.
மேலும் இதை வெளியே சொன்னால், உன்னுடன் நான் உல்லாசமாக இருக்கும் வீடியோ எனது செல்போனில் உள்ளது. அதை இணையதளத்தில் வெளியிட்டு உன்னையும், உனது குடும்பத்தையும் கேவலப்படுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டினார். மேலும் எனது அண்ணனை பார்த்து, இன்றைக்கு உனது தங்கையை காப்பாற்றி விட்டாய். அவளை கொல்லாமல் விட மாட்டேன் என்று கூறி மிரட்டி விட்டு சென்றுவிட்டார்.

நடவடிக்கை

எனது கணவர் தாக்கியதில் எனக்கு காயங்கள் ஏற்பட்டதால், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

என்ஜினீயர் கைது 

இந்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.
கைதான ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் என்ஜினீயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டிய என்ஜினீயர் ைகது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்