சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது; 19 லிட்டர் ஊறல் அழிப்பு

வல்லநாடு பகுதியில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 19 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.;

Update:2021-10-15 21:17 IST
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாடு பகுதியிலுள்ள செங்கல் சூளையில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 லிட்டர் ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

செங்கல் சூளையில்...

 தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திஸ் மேற்பார்வையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வல்லநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சாராயம்

வல்லநாடு சாலையில் இருந்து மணக்கரை செல்லும் ரோடு பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் 3 பேர் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சாமியாத்து பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாரிமுத்து (வயது 36), பராக்கிராமபாண்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ்குமார் (52), மற்றும் குரங்கணி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வேல்பாண்டி (39) ஆகியோர் என தெரிந்தது. 

3 பேர் கைது

அந்த மூன்று பேரும் பழங்களை வைத்து சாராய ஊறல் தயார் செய்து, அதில் கள்ளச்சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  19 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. அதை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து அந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்