புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2021-10-15 14:24 GMT
பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிப்படி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் கால்வாய்களில் நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கால்வாயில் மலர்தூவி வரவேற்றார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற் பொறியாளர் லீலாவதி மற்றும் உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

2,573 மில்லியன் கன அடி

முதல்-அமைச்சரின் ஆணைப்படி பி.ஏ.பி. திட்ட தொகுப்பில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள பொள்ளாச்சி கால்வாயில் ‘ஆ' மண்டலத்தில் 5621 ஏக்கரும், ஆனைமலை தாலுகாவில் உள்ள பொள்ளாச்சி கால்வாய் ‘ஆ' மண்டத்தில் 6321 ஏக்கரும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘அ' மண்டலத்தில் 5558 ஏக்கரும், சேத்துமடை கால்வாய் ‘ஆ' மண்டலத்தில் 2529 ஏக்கரும், 

ஆழியாறு ஊட்டுக்கால்வாய் ‘ஆ' மண்டலத்தில் 2303 ஏக்கரும் சேர்த்து மொத்தம் 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 135 நாட்களில் உரிய இடைவெளியிட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2573 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்