42 மண்டல குழுவினர் தயாராக இருக்க வேண்டும்

42 மண்டல குழுவினர் தயாராக இருக்க வேண்டும்

Update: 2021-10-15 14:11 GMT
ஊட்டி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 42 மண்டல குழுவினர் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். 

கூட்டத்துக்கு வனத்துறை, சுற்றுப்புற சூழல் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, தோட்டக்கலை துறை, வனத்துறை, மின்சாரவாரியம், காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

283 பாதிப்பு பகுதிகள்

நீலகிரியில் 6 தாலுகாகளில் மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களாக 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, இதில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட இடங்கள் TNSMART செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 456 முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருப்பில் இருக்க வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவசர உதவி 1077

மலைப்பிரதேசம் என்பதால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழும் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளது. 

எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் போதுமான பொக்லைன் எந்திரங்கள், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மின்கம்பங்கள் அருகே உள்ள மரக்கிளைகளை மின்சார வாரியம் அகற்ற வேண்டும். 

மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போன்ற மின் சாதனங்கள் தங்கு தடையின்றி செயல்பட வேண்டும். மழை மற்றும் இயற்கை இடர்பாடுக ளால் பாதிப்பு ஏற்படும் போது அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 

சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர், மருந்து இருப்பு போன்றவைதயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்