பட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா
பட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில்களில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி பட்டிவீரன்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், நெல்லூர் ஆகிய 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளன்று எல்லை காவல்காரசாமி பூஜைக்கு பின்பு சிங்கவாகனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள முத்தாலம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு கண் திறப்பு, தங்க ஆபரண அலங்காரம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. 2-ம் நாள் அம்மனுக்கு மா விளக்கு, பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
3-ஆம் நாளான நேற்று மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி முளைப்பாரி ஊர்வலத்துடன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் பூஞ்சோலைக்கு சென்றடைந்தவுடன் திருவிழா நிறைவு பெற்றது.
கொரோனா பரவல் காரணமாக திருவிழாவின் போது வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், பெண்கள் பாட்டுப்பாடி கும்மி அடித்தல், கரகாட்டம் போன்ற பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழாக்குழுவினரும், கோவில் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர். திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமையில் போலீசார் செய்திருந்தார்கள்.