கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2021-10-15 12:26 GMT
திருப்பூர்
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
திருட்டை தடுக்க நடவடிக்கை 
ஆடைகளுக்கு பெயர் பெற்ற திருப்பூரில் பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குவதற்கு திருப்பூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் வருவார்கள். குறிப்பாக திருப்பூரின் அருகில் உள்ள மாவட்டங்களான ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து பலர் வருவார்கள். இதுதவிர வெளிமாநில வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடைகளை வந்து விற்பனைக்காக வாங்கி செல்வார்கள். 
இதுபோல் பண்டிகை காலம் நெருங்க, நெருங்க கடை வீதிகள் மற்றும் ஜவுளிக்கடைகளில் ஆடைகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். இந்த பண்டிகை காலங்களை கொண்டு திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
கண்காணிப்பு கோபுரங்கள் 
அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் மாநகரில் கடந்த சில நாட்களாக கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கவும், சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கவும் மாநகரில் புதுமார்க்கெட் வீதி, யுனிவர்செல் பஸ் நிறுத்த பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோபுரங்களில் இருந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இதுபோல் மாநகர் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்