அந்தோணியார் ஆலயத்தில் 8 பவுன் நகை கொள்ளை

களியக்காவிளையில் பட்டப்பகலில் அந்தோணியார் ஆலயத்தில் சொரூபங்களை உடைத்து 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் ேதடி வருகிறார்கள்.

Update: 2021-10-13 20:56 GMT
களியக்காவிளை:
களியக்காவிளையில் பட்டப்பகலில் அந்தோணியார் ஆலயத்தில் சொரூபங்களை உடைத்து 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அந்தோணியார் ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பஸ் நிலையம் அருகில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆலயத்துக்குள் சென்று வழிபடுவது வழக்கம். இதனால், ஆலயத்துக்குள் எப்போதும் பக்தர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். 
8 பவுன் கொள்ளை
இந்தநிலையில் நேற்று மதியம் ஆலயத்துக்குள் சென்ற பக்தர்கள் அங்கு மாதா மற்றும் அந்தோணியார் சொரூபத்தின் கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி ஆலய நிர்வாகத்திடம் தெரியவித்தனர். 
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ஆலய நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3½ பவுன் சங்கிலியும், அந்தோணியார் சொரூபத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
டிப்-டாப் ஆசாமி
இதுகுறித்து பங்குபேரவை துணை தலைவர் ராயர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 
அப்போது, மதியம் 12 மணி அளவில் நீலகலர் பேண்ட், சட்டை அணிந்த டிப்-டாப் ஆசாமி ஒருவர் முதுகில் ரோஸ் கலர் பேக் போட்டபடி சர்வ சாதாரணமாக ஆலயத்துக்குள் வழிபட செல்வது பதிவாகி இருந்தது. அந்த ஆசாமி மாதா மற்றும் அந்தோணியார் சொரூபத்தின் கண்ணாடி கூண்டுகளை மைக் ஸ்டாண்டினால் அடித்து உடைத்து விட்டு நகைகளை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த ஆசாமி முககவசம் அணிந்திருந்ததால் முகம் தெளிவாக பதிவாக வில்லை. 
பரபரப்பு
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள  மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில்  பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்