ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் பிடித்து சேதமான படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேசுவரம்,
இலங்கை கடற்படையால் பிடித்து சேதமான படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஒரு ஆண்டுக்கு அரசுக்கு அதிக அளவு அந்நிய செலவானி ஈட்டிக் கொடுக்கும் மீனவர்களுக்கு உற்பத்தி விலையிலேயே டீசல் வழங்க வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கடலில் மூழ்கி சேதமான தமிழக மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ராமேசுவரத்தில் மீன் பிடிப்பதற்காக அனுமதி பெற்றும் டீசல் வழங்காமல் உள்ள 19 படகுகளுக்கு மானிய டீசல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசூராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி, இருதயம் எடிசன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேலை நிறுத்தம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக ராமேசுவரத்தில் நேற்று 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வருமானமின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
டீசல் விலை உயர்வை கண்டித்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 6-வது நாளாக நேற்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 80-க்கும் அதிகமான விசைப்படகுகள் தென் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.