லகிம்பூரில் விவசாயிகள் மீதான வன்முறைக்கு கண்டனம் முழு அடைப்பால் முடங்கியது, மராட்டியம் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை
லகிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து ஆளும் கட்சிகள் சார்பில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் மராட்டியம் முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் ஓடாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.;
மும்பை,
மத்திய அரசின் வேளான் சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முழு அடைப்பு போராட்டம்
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா, மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு விவசாயிகள் கருப்பு கொடி காட்டுவதற்கு இருந்தனர். அப்போது விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் காரை மோதினர். இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, மராட்டியத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடந்தது. மாநிலத்தை ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தன.
முன்னதாக போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு மனதுடன் ஆதரவு தர வேண்டும் என ஆளும் 3 கட்சிகளும் கோரிக்கை விடுத்து இருந்தன. இதேபோல போராட்டத்தில் சிவசேனா முழு வீச்சில் பங்குபெறும் என அதன் செய்தி தொடர்பாளா் சஞ்சய்ராவத் எம்.பி. கூறியிருந்தார்.
பஸ்கள் ஓடவில்லை
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்று மாநில தலைநகர் மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடை போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இதேபோல பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படவில்லை. தாராவி, சயான், சுன்னாபட்டி உள்ளிட்ட 9 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக பெஸ்ட் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதேபோல மும்பையில் மஞ்சள்-கருப்பு டாக்சிகள், ஆட்டோக்களும் பெரிய அளவில் இயக்கப்படவில்லை. இதனால் அலுவலகம், வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் அதிக பணம் வாங்கி கொண்டு பயணிகளை ஏற்றி சென்றனர்.
பஸ், ஆட்டோ, டாக்சி இயங்காத போதும் மும்பையின் உயிர்நாடியாக கருதப்படும் மின்சார ரெயில் சேவை வழக்கம் போல இயக்கப்பட்டது. எனினும் பஸ், ஆட்டோ, டாக்சி இயங்காததால் மின்சார ரெயில்களில் கூட்டம் அலை மோதியது. அதே நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து நேற்று மும்பையின் பல்வேறு பகுதிகளில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மும்பை தவிர தானே, நவிமும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. வசாயில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியினர் நடத்திய இந்த போராட்டத்தால் மும்பை உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் முழு அடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்று உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.
அதே நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீா்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார். இது குறித்து அவர் கூறும்போது, “முழு அடைப்புக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 3 கட்சிகள் தான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. நாங்கள் தான் பந்திற்கு அழைப்பு விடுத்தோம். பொதுமக்களும் பா.ஜனதா அரசின் மீது அதிருப்தியில் தான் உள்ளனர். எனவே அவர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தனர்” என்றார்.
ஆளுங்கட்சி தலைவர்களின் இடங்களில் நடந்து வரும் வருமான வரி சோதனையே போராட்டத்திற்கு காரணம் என முழு அடைப்பு போராட்டம் குறித்து பா.ஜனதா விமர்சித்து உள்ளது.