இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையிலான போலீசார் அச்சுந்தன்வயல் சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை மடக்கி நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்று மடக்கினர். அப்போது வாகனத்தில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார்.
இதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது ஈரோட்டில் இருந்து மஞ்சள் கொண்டு வருவதாக தெரிவித்தனர். வாகனத்தை சோதனையிட்டபோது அதில் மஞ்சள் மூடைகள் இருந்ததை கண்ட போலீசார், வாகனத்தில் இருந்த 2 பேரையும் அழைத்து வந்து ேபாலீ்ஸ் நிலையத்தில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு வண்டியூரான் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(வயது 42), சபரிநாதன்(23) என்பது தெரிந்தது.
இலங்கைக்கு கடத்த முயற்சி
இவர்கள் இருவரும் மஞ்சளை ஈரோட்டில் இருந்து ராமநாதபுரம் மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த அன்வர் என்பவருக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். ஈரோடு பகுதியில் இருந்து மஞ்சளை மொத்தமாக வாங்கி வந்து கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் தற்போது இலங்கையில் மற்ற பொருட்களைவிட மஞ்சளுக்கு கடும் கிராக்கி நிலவுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து அன்வரை தேடி வருகின்றனர். மொத்தம் 2400 கிலோ மஞ்சளும், அதனை கொண்டு வந்த சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு்ள்ளன. பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.