பஸ் ஏணிப்படியில் மாணவர்கள் ஆபத்து பயணம்; தேனி குழந்தைகள் நலக்குழு தானாக முன்வந்து விசாரணை

பஸ் ஏணிப்படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள் குறித்து 'தினத்தந்தி'யில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.;

Update: 2021-10-11 17:06 GMT
தேனி:
பஸ் ஏணிப்படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள் குறித்து 'தினத்தந்தி'யில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஆபத்து பயணம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளிகளுக்கு வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் மாணவ-மாணவிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளிலும், பஸ்சின் பின்பக்க ஏணிப்படியிலும் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். புத்தகப்பையை முதுகில் சுமந்தபடி பஸ் ஏணிப்படியில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தது தொடர்பாக 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இந்த செய்தி எதிரொலியாக இப்பிரச்சினையை தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதன்படி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தேனி அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஆகியோருக்கு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சாந்தி, சண்முகம், பாண்டியராஜா ஆகியோர் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
15 நாட்களுக்குள்...
உயிருக்கு ஆபத்தான நிலையில் பஸ் ஏணிப்படியில் பயணிக்கும் மாணவர்கள் பற்றிய விவரம் நாளிதழ் செய்தியாக வந்துள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான பஸ் பயணம் என்பது உறுதியாகிறது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை எனவும், பஸ் படிக்கட்டுகளிலும், ஏணிப்படியிலும் புத்தக பைகளுடன் தொங்கிக் கொண்டு பயணிப்பதும் உறுதி செய்யப்படுகிறது. மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பதும் தெரிய வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் நலக்குழுவால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்