கம்பத்தில் மெக்கானிக் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு
கம்பத்தில் மெக்கானிக் வீட்டுக்குள் புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கம்பம்:
கம்பத்தில் மெக்கானிக் வீட்டுக்குள் புகுந்து 35 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைகள் திருட்டு
தேனி மாவட்டம் கம்பம் வன அலுவலக சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பஸ், லாரிகளை பழுது நீக்கும் டீசல் பம்ப் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அவரது மகன் பிரபு (21) மட்டும் வீட்டில் இருந்தார். சிறிது நேரத்தில் அவரும் வீட்டை பூட்டிவிட்டு மெக்கானிக் கடைக்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு இரவு பிரபு தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பிரபு உடனடியாக கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். அப்போது மோப்ப நாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. அது நகைகள் திருடுபோன வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி, வனத்துறை அருகே உள்ள திருவள்ளுவர் காலனி வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பரபரப்பு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருட்டு நடந்த வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
கம்பத்தில் மெக்கானிக் வீட்டில் 35 பவுன் நகைகள் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.